‘மக்கள் செய்தி ஊடக வலையமைப்பை’ கூட்டிணைப்பதற்கான அழைப்பு

' Invitation for Incorporate ‘PEOPLES NEWS MEDIA NETWORK'

1.0 அறிமுகம் 
மக்கள் செய்தி ஊடக வலையமைப்பானது, தனியுடைமையாளர்களினால் ஆதிக்கம் செய்யப்படும் ஊடகங்களுக்கும், அவ் ஊடகங்களால் வளர்க்கப்பட்டுள்ள மக்கள் விரோத ஊடக பண்பாட்டுக்கும் மாற்றாக மக்களால் ஆதிக்கம் செய்யப்படும் ஊடகத்தையும், முற்போக்கு புரட்சிகரமான மக்கள் நேய ஊடக பண்பாட்டையும் கட்டியெழுப்பும் நோக்கில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களை நடத்தும் நோக்கில் ஒன்றிணைந்த குழுவினர் ஆவர். 

மக்கள் செய்தி ஊடக வலையமைப்பினால் கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இருவார இதழாக ‘மக்கள் பத்திரிக்கை’ எனும் பெயரில் வெளியிட்டிருந்தது. அரச புலனாய்வு பிரிவினரின் பலத்த நெருக்குவாரங்களுக்கு மத்தியில் பத்திரிக்கையை வெளிக்கொணர்ந்திருந்தாலும், ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளை தொடர்ந்து பிரகடனப்படுத்தபட்ட அவசரகால சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் பத்திரிக்கையை வெளிக்கொணர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அவசரகால நிலைமை பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதின் பெயரில் அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்குகளுக்கு எதிரான நடவடிக்கைளை முடக்குவதற்கான முயற்சிகளே நடந்து வருகின்றது. அவசரகாலசட்டத்தின் ஒழுங்கு விதிகளும் அதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை எதிர்க்கொண்டு பத்திரிக்;கையை வெளிகொணரவும், சட்ட ரீதியான அந்தஸ்த்தை பெற்றுக் கொள்ளவும், எமது குழு உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியாக கூட்டணைக்கப்பட உள்ளது 

 2.0 நிறுவன கூட்டிணைப்பு
மக்கள் செய்தி ஊடக வலையமைப்பு ‘உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியாக’ கூட்டிணைக்கப்படும். உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியானது, இலாபத்தை இலக்காக கொள்ளாமல் பொது நோக்கில் கூட்டிணைக்கப்படும் கம்பனி வகையாகும். பங்கு இலாபங்களோ, நட்டமோ பங்காளர்களுக்கு பொறுப்பாக்கப்படாது. கம்பனி கலைக்கப்படும் போது சொத்துக்கள் கம்பனி அகவிதிகளில் கூறப்பட்டுள்ள வகையில் கையாளப்படும்.

 3.0 நிறுவன பங்காளர்கள்
இலங்கை தீவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மொழியால் தொடர்பாட கூடிய அனைவரும் இந்நிறுவன பங்காளராக உரித்துடையவர்கள் ஆவர். இலங்கை தீவை பூர்வீகமாக கொண்ட சுமார் 60 இலட்சம் தமிழ் மொழி பேசுபவர்களையும் பங்குதாரராக்குவதே நிறுவனத்தின் இலட்சிய இலக்காக அமையும். முதல் கட்டமாக குறைந்த பட்சம் 300 பேரை இணைத்துக் கொண்ட பின்னர் நிறுவனம் சட்டரீதியாக பதிவு செய்யப்படும். 

 4.0 பங்கு பெறுமதி 
பங்குடமை ஒன்றின் அதிகபட்ச பெறுமதி ஆயிரம் ரூபாய்களாக அமையும். ஒரு பங்குதாரர் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பங்குரிமையை கொண்டிருக்க முடியாது. 10 பேர்க் கொண்ட குழுவாக இணைந்து பங்காளராகலாம். இதன் போது குறித்த குழுவினர் தனி ஒரு பங்காளராக கொள்ளப்படுவர். குழுவின் பிரதிநிதி ஊடாக நிறுவனம் தொடர்பாடலை கொண்டிருக்கும். எனினும், வாக்களிப்புகளின் போது தனிதனி பங்காளர்களாக கருத்தில் கொள்ளப்படுவார்கள். 

5.0 நிறுவன கட்டமைப்பு 
நிறுவனம் ஆரம்ப பருவத்தில் பணிப்பாளர் சபை ஒன்றை கொண்டு இயங்கும். பின்னரான காலத்தில் தேவையான நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும். முடிவுகள் சனநாயக வழியில் பங்காளர்களின் உடன்பாடுகளுடன் எடுக்கப்படும். பங்காளர்களுடனான தொடர்பு நேரடியாகவும், இலத்திரனியல் சாதனங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்படும். திருகோணமலையில் தலைமைக் காரியாலயமும் இயக்கப்படும்.

6.0 நிறுவன வேலைத்திட்டம் 
நிறுவனம் ஏலவே வெளிவந்துள்ள மக்கள் பத்திரிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிடும். மேலும். பொருத்தமான பெயரில் செய்தி இணையத்தளம் ஒன்றினையும் நடத்தும். 

      6.1 மக்கள் பத்திரிக்கை 

  • இது வரை வெளிவந்துள்ள 5 இதழ்களின் தொடர்ச்சியாக பத்திரிக்கை வெளிவரும். 
  • பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவாக தற்போதிருக்கும் குழுவே தொடரும்.
  • ஆசிரியர் குழு தேவைகளின் நிமித்தம் பணிப்பாளர் சபையின் தீர்மானங்களின்      பிரகாரம் விரிவு படுத்தப்படும். 
  • தற்சமயம் 12 பக்கங்களில் இருவார பத்திரிக்கையாக வெளிரும் மக்கள் பத்திரிக்கை காலகிரமத்தில் வார பத்திரிக்கையாக வெளியிடப்படும். 

6.2 இணையம் 
அச்சு ஊடக துறையை போலவே, மக்கள் ஆளுமை செய்யக் கூடிய இணைய செய்தி ஊடகம் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும். இதற்கு மேலதிகமாக, மக்கள் பத்திரிக்கையில் வெளியாகும் பத்திகளும், செய்திகளும் இணையதளமொன்றில் பதிவு செய்யப்படும். 

7.0 நிதியும் செலவீனங்களும் 
ஆரம்ப பங்குதாரர்களின் பங்களிப்பு தொகை மூலதனமாக திரட்டப்படும். எதிர்பார்க்கை தொகை – 300 பங்களார்கள் ழூ 1000 ஸ்ரீ 3இ00இ000 ரூபாய்.

 7.1 இதுவரையிலான கணக்கறிக்கை





  • பத்திரிக்கையின் சகல இதழ்களும் இலவசமாகவே வழங்கப்பட்டது. 
  • ஒவ்வொரு இதழிலும் 2000 பிரதிகள் அச்சிடப்பட்டது.
 7.2 எதிர்வரும் 3 மாதங்களுக்கான உத்தேச திட்டம் 



  • பத்திரிக்கை எழுத்தாக்கம், வடிவமைப்பு உட்பட சகல விடயங்களும் தன்னார்வ அடிப்படையில் இயங்குபவர்களால் முன்னெடுக்கப்படும். எனினும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் தனியான வகையில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.
  • நிறுவன காரியாலய இடம் நலன் விரும்பிகளிடமிருந்து கட்டணமற்ற முறையில் பெற்றுக் கொள்ளப்படும்
  • .பத்திரிக்கை விநியோகம் தன்னார்வ பங்களிப்பாளர்கள் மூலம் முன்னெடுக்க முயற்சிக்கப்படும். 
  • பத்திரிக்கை பிரதி ஒன்றின் விலை 20 ரூபாய் ஆகும். எனினும், விற்பனையாளருக்கு 10 ரூபாய் என்றடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் குறைந்த பட்சம் 100000 ரூபாய் ( அதிகபட்சம் 200000 ரூபாய்) பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
  • மூன்று மாதங்களுக்கு பின்னரான நடத்துகை செலவீனங்களை கருத்தில் கொண்டு பத்திரிக்கைகான சந்தா சேகரிக்கப்படும். இக்காலப்பகுதியில் பங்காளர்களின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த முயற்சிக்கப்படும்.
  • சமூக பொறுப்புடனான இணையத்தள விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்ட முயற்சிக்கப்படும். 

8.0 வளர்ச்சி திட்டங்கள் 
  • மூன்று மாத காலப்பகுதியில் பத்திரிக்கை பிரதிகளின் எண்ணிக்கையை 10000 ஆக அதிகரித்தல்.  
  • பத்திரிக்கை பக்கங்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரித்தல். 
  • பிரதேச மட்டத்திலான பத்திரிக்கை கமிட்டிகளை அமைத்தல். 
  • பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர தொழிலாக பத்திர்கை விநியோகம் செய்ய வாய்ப்புகளை வழங்குதல்.

9.0 இலக்கு 
இலங்கையில் முதலாளிவர்க்கத்தினராலும், அரசியல் அதிகார தரப்பினராலும் நடத்தப்படும் மக்கள் விரோத அச்சு ஊடகங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களுக்காக , மக்களால் நடத்தப்படும் முதன்மையான பத்திரிக்கையாக மக்கள் பத்தரிக்கையை வளர்த்தெடுத்தல். 

10. முடிவுரை 
இலாப நோக்கற்ற மக்களை அடிப்படையாக கொண்ட இவ் வேலைத்திட்டத்தில் தன்னார்வலர்களும், மக்களும் கரம் கோர்ப்பர்கள் என மக்கள் செய்தி ஊடக வலையமைப்பு குழுவினர் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதை சாத்தியப்படுத்தும் வகையில் அயராது முயற்சித்தும் வருகின்றார்கள். 

மக்களுக்கான சமூக கட்டமைப்பும், அரசியல் அதிகாரமும் பிறக்கும் வரை இந்த வேலைத்திட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். 

இதுவரையிலும் இப்பத்திரிக்கை வெறும் நான்கு பேரை மாத்திரமே கொண்ட குழுவினரின் சுயமுயற்சியாலும், சுய உழைப்பாலுமே இப்பத்திரிக்கை வெளிக்கொணரப்பட்டது. 

எனினும், இரண்டு இதழ்கள் வெளிவந்த பின்னரான காலப்பகுதியில் அரச படைகளினதும், புலனாய்வு தரப்பினரினதும் கடுமையான அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளானது. இச்சூழலில் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசர கால சட்ட விதிகளில் பத்திரிக்கைகள், அச்சகங்களை முடக்கும் விதியும் உள்ளடக்கப்பட்டது. இநநிலையில் பத்தரிக்கை வெளியிடப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை அவசரகால சட்டத்தின் பிரகாரம் கைது செய்;யும் வகையில் நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். இந்நிலையிலேயே பத்திரக்கை வெளியீட்டை சட்ட பூர்வ பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்திருந்தோம். 

முதலாளிவர்க்கமும், பேரினவாதமும் இராணுவ பலம் கொண்டு கோலொச்சும் கால கட்டமொன்றில் அவர்களையும், அவர்களின் மக்கள் விரோத ஊடக பலத்தையும் எதிர்த்து மக்கள் ஊடக பண்பாட்டை கட்டியெழுப்புவது தனியொரு குழுவினரின் முயற்சிகளால் ஒருபோதும் சாத்தியப்படாது. 

பரந்துபட்ட வகையிலான வெகுசனத்தின் பங்குபற்றுதலுடனான முன்னெடுப்புக்கள் மூலமே முதலாளிவர்க்கத்தினதும், பேரினவாதத்தினதும் அதிகாரத்தையும், அடக்குமுறையையும் எதிர்க்கொண்டு மக்கள் ஊடகத்தை கட்டியெழுப்புவதை சாத்தியபடுத்தும். இதன் பொருட்டே மக்கள் நல சக்திகளினதும், செயல்பாட்டாளர்களினதும் பங்கேற்பை கோரி நிற்கின்றோம்.